தமிழ் விழா 2008 மாபெரும் வெற்றி! ஆதரவளித்த தமிழ் உறவுகளுக்கு கோடி நன்றிகள்!! மீண்டும் அட்லாண்டாவில் சந்திப்போம்!!!
Thank you for making the FeTNA convention a great success! Hope to meet you all at Atlanta next year!!
PRESS RELEASE
இந்த மாநாட்டை அல்லது விழாவைப் பற்றி கதைக்கும் முன்பாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (www.fetna.org) சிறப்புத்தன்மைகளைக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.
வணிகமயமாக்கப் பட்ட இந்த உலகில் சிறுபான்மையினங்கள் தங்கள் இன அடையாளங்களான மொழி, கலை, பண்பாடு போன்றவற்றைப் பேணுவது என்பது மிகக் கடினமான, ஆதாயமில்லாத ஒன்று. வணிகமய உலகின் ஆரம்பமும், அடித்தளமுமான அமெரிக்க மண்ணில் உட்பிளவுகளுக்கும், போட்டி, பொறாமைகளுக்கும் நிறைந்த தமிழினம் சுய அடையாளத்துடன் பெரிய அளவில் ஒரு விழாவை இருபத்தியோரு ஆண்டுகளாக நடத்தி வருகிறதென்றால், இதைவிட பேரவைக்குப் பெருமை வேறொன்று சொல்ல வேண்டியதில்லை. எத்தனையோ இன்னல்களுக்கு இடையில், செம்மையான மொழிக்கூறுகள், பாரம்பரியக் கலைகள், நடன நிகழ்ச்சிகள், நவீன அறிவியல் வளர்ச்சிகள் போன்றவற்றை உள்ளடக்கி சமத்துவம், சமூக நீதி போன்ற விழிப்புணர்வுடன் இம்மானாடு நடத்தப் படுகின்றது என்பது இதன் சிறப்பு. தமிழ்த் தாயகங்களில் ஒடுக்கப் பட்ட சமூகங்களின் பிரதினிதிகளும், கலைஞர்களும் இவ்விழாக்களுக்கு வரவழைக்கப் பட்டு, சிறப்பாக போற்றப் படுகின்றனர் என்பது இன்னொரு சிறப்பு. முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கப் படும் ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாக தன் குரலைத் தொடர்ந்து ஒலித்து வருகிறது இப்பேரவை என்பது குறிப்பிடத்தகுந்தது.
அடுத்து, இந்த ஆண்டு விழா, தமிழிசைக்கு பெருமை சேர்த்த இசைப் பேரறிஞர் பெரியசாமி தூரன் அவர்களின் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடப் பட்டது. திரு தூரன் அவர்களின் பாடல்கள் விழா முழுதும் போற்றப்பட்டது. அவர்களின் குடும்பத்தினர் விழா மேடையில் சிறப்புச்செய்யப்பட்டனர். இவ்விழா நடுத்தர வர்க்கத்தின் உல்லாச உலகான ஓர்லாண்டோவிற்குச் சென்று உல்லாசமாக இராமல் தமிழறிஞர்களின் பேச்சுக்கு செவி மடுத்து, தமிழ் இலக்கியத்தை நுகர்ந்து, தமிழிசைக்குத் தலையாட்டி, தமிழ் நடனத்தைக் கண்டு களித்து, தமிழர் அடையாளத்தைப் பேணச் சூளுரை ஏற்று, தமிழைக் கணினி அல்லது கம்ப்யூட்டரில் செயலாக்கியது மாநாட்டுக்கு வந்த அதிசயத் தமிழர் கூட்டம். குறிப்பாக என்னைக் கவர்ந்தவை சில உண்டு. பேராசிரியர். சுப வீரபாண்டியன் அவர்களின் தெள்ளத்தெளிந்த சிந்தனைகள் பொதிந்த சொற்பொழிவுகளும், இயக்குனர் சீமானின் தமிழுணர்வினைத் தட்டியெழுப்பும் இசையுடன் கலந்த பேச்சும், இயக்குனர் தங்கர் பச்சானின் யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டும் வெளிப்படையான பேச்சும் இம்மானாட்டுக்கு வந்தவர்களை கொஞ்சமாவது உலுக்கியிருக்கும். பேராசிரியர் பாலசுப்பிரமணியத்தின் கணீரெனும் குரலில் இசைத்த சிலப்பதிகாரப் பாடல்களும், அதற்கு ஒத்திசைத்த அருமையான இசைக்குழுவும், கலைமாமணி நர்த்தகி நடராஜனின் துடிப்பான பரதமும், இதைப் போன்றதோர் நாட்டிய நிகழ்ச்சியைக் கண்டதில்லை என்று அரங்கத்திலிருந்த அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.
தமிழிசை ஆராய்ச்சியாளர் பேராசிரியர் மம்மது அவர்களின் உரை, ஈராயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழிசை, கர்நாடக இசை என்ற புதிய பெயருடன் இன்று உலவினாலும், தமிழிலக்கியங்களில் தமிழ்ப் பண்களாக விரவிக் கிடக்கின்றது என்று விளங்க வைத்தது. விழாவின் சீரிய நிகழ்ச்சிகளிடையே மெல்லிய நகைச்சுவையை துய்க்கச் செய்தது ஈரோடூ மகேஷ் வழங்கிய நிகழ்ச்சிகள். பட்டி மன்றமானாலும், தனிப்பட்ட நகைச்சுவை விருந்தானாலும் அரங்கத்தைக் கலகலப்பூட்டினார். அந்த இளைஞர். நடிகர் நந்தாவின் பேச்சு நம்மை ஈழத்துக்கேக் கொண்டு சென்றது. ஆணிவேர் படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பின் மூலம் அவர் அறிந்த கொண்ட உண்மைகளைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழறிஞர் கோ. வேள்நம்பி அவர்கள் தலைமையில் "தாயே, தமிழே! வருங்காலம் நின் காலம்" என்கிற தலைப்பில் கவியரங்கம் நடை பெற்றது. ஈரோடு மகேஷ் தலைமையில் "இனி, தமிழ் வளர்வது: தாய்த்தமிழ் மண்ணிலா? வேற்று மண்ணிலா?" என்கிற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. பட்டிமன்றம் மற்றும் கவியரங்கத்தில் வட அமெரிக்காவிலிருந்து நமது தமிழ் உறவுகள் பங்கேற்று தமிழுக்கு மகுடம் சூட்டினர். சுதா இரகுநாதனின் செவ்விசையும், ஐங்கரனின் மெல்லிசையும் மக்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தின என்றால் மிகையாகாது
தமிழ்ச்சங்கங்களின் நிகழ்ச்சிகள் பல பிரமிக்க வைத்தன. குறிப்பாக வாசிங்டன் தமிழ்ச்சங்கம் வழங்கிய வினாடி-வினா நிகழ்ச்சி தமிழ்த் தொலைக் காட்சிகள் அனைத்தையும் வெட்கப் படவைக்கும் தரமான நிகழ்ச்சிகள். தமிழ்த் தொலைக்காட்சிகள் அனைத்தும் திரைப்பட உலகையும், அரைகுறை ஆங்கிலத்தமிழையும் கட்டிக் கொண்டு அழுது வரும் இக்காலத்தில் தமிழ் இலக்கியங்களையும், இசையையும் முன்னிறுத்திய என்னதொரு அருமையான வினாடி வினா. இதைப் பல மாதங்களாக உழைத்துச் செம்மையாகத் தயாரித்து வழங்கும் பீட்டர் எரோனிமூஸ் குடும்பத்தினரும், வாசிங்டன் தமிழ்ச்சங்கமும் பெரும்பாராட்டுக்குரியது. கனடா தமிழ்ச்சங்கம் வழங்கிய நாட்டிய நாடகம் ஈழத்தமிழர் வாழ்வில் சாதி ஒடுக்குமுறை நிலவியதை கண்முன் நிறுத்தியது. மிசௌரித் தமிழ்ச்சங்கம் வழங்கிய பறை மற்றும் சிலம்பம் நிகழ்ச்சி, தமிழர்களின் இசைக் கருவியையும், தற்காப்புக் கலையையும் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தது.
வெவ்வேறு தமிழ்ச்சங்கங்களும், அமெரிக்க தமிழ் இளைஞர் அமைப்பும் இந்த மாநாட்டில் தங்கள் நிக்ழச்சிகளை நடத்திக் காண்பித்தனர். அமெரிக்க நகரங்களில் நடத்தப் படும் பல்வேறு தமிழ்ப் பள்ளிகளிலிருந்தும் குழந்தைகள் வந்திருந்து போட்டிகளில் கலந்து கொண்டனர். மேலும் தொழில் முனைவோர் கருத்தரங்கம், திருமண செய்ய முனைவோருக்கான சந்திப்புகள் (www.tamilmatrimony.com) போன்றவற்றில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். உத்தமம் (www.infitt.org) மற்றும் தமிழ்மணம் (www.thamizmanam.com) அமைப்புகளின் தமிழ்க் கணினிப் பயிலரங்கம் மற்றும் வலைப்பதிவுப் பயிற்சிகள் சிறப்பாக நடைபெற்றன. மின்னஞ்சலிலும், இணையத்திலும் தமிழில் எழுதப் பயிற்சி பெற்றனர். வேதாத்திரி உலக அமைதி மையம் வழங்கிய வேதாத்திரி மகரிஷியின் சித்த யோகாசனப் பயிற்சி வகுப்புகளில் கலந்து பலர் பயன்பெற்றனர்.
தமிழகத்தில் இருந்து தமிழ் வந்திருந்த தமிழிணைய பல்கலைக்கழக இயக்குனர் முனைவர்.நக்தீரனுடன் தமிழ்ப்பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துரையாடினர். அமெரிக்க தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்திட்டம், தேர்வுமுறை, மதிப்பீட்டுமுறை ஆகியவை விவாதிக்கப்பட்டன. தமிழிணைய பல்கலைக்கழக சான்றிதழ்க் கல்வி முறை தெரிவு செய்யப்பட்டு ஐந்து பள்ளிகள் தமிழிணைய பல்கலைக்கழகத் தொடர்பு மையங்களாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. தமிழ்ச்சங்கப்பேரவையின் பள்ளிக்குழு தொடர்ந்து பணியாற்றி மேலும் பல பள்ளிகளை இத்திட்டத்தில் இணைத்துப் பயன்பெற செய்வது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், குழந்தைகளின் தமிழ்த் திறனை வளர்க்கும் விதத்தில் தமிழ் வினாடி வினா, பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிகள் நடந்தன. திரு பொற்செழியன் மற்றும் திரு செல்வன் பச்சமுத்து அவர்கள் ஒழுங்கு படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு திரு ஈரோடு மகேஷ் அவர்கள் பரிசளித்து சிறப்பு செய்தார்.
வேலூரிலிருந்து வந்திருந்த விஐடி பல்கலைக் கழக நிறுவனரும், வேந்தருமான திரு. கி. விஸ்வநாதனுக்குச் சிறப்பு விருது வழங்கிக் கவுரவிக்கப் பட்டது. மேலும் அமெரிக்க மண்ணில் தமிழ்த் தொண்டாற்றியதற்காக நியூயார்க்கைச் சேர்ந்த திரு சண்முகம் மற்றும் வாசிங்டனைச் சேர்ந்த திரு. பாலகன் ஆறுமுகசாமி போன்றவர்களுக்கு மாட்சிமை விருதுகள் வழங்கப் பட்டன.
விழாவின் இறுதி நாளன்று “இருபதாம் நூற்றாண்டில் தமிழ் வளர்ச்சி” என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பேசினர். விழாவின் அனைத்துக் கொண்ட்டங்களுக்கிடையேயும், ஈழத்தில் அரசு ஒடுக்குமுறையின் கீழ் அல்லல் படும் ஈழத்தமிழ் மக்களை அனைவரும் நினைவு கூர்ந்தனர். அம்மக்களுக்கு விரைவில் உரிமைகளை மீட்டுத் தர வல்லரசுகள் உதவவேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து சிறப்புப் பேச்சாளர்களும், கலைஞர்களும் வலியுறுத்தினர்.
இந்த தமிழர் விழா அடுத்து ஆண்டு (2009) ஜார்ஜியா மாநிலத்தில் அடலாண்டா மாநகரில் நடைபெறும் என்று முடிவு செய்யப் பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சிறந்த மானாட்டை ஒருங்கிணைக்க திரு. சி. சுப்பிரமணியம், திரு. ஜெய் தபராஜ் போன்றவர்கள் ஏற்றுக் கொண்ட கடினங்கள் விவரிக்க முடியாதவை. அவர்களுடைய உழைப்பை ஒவ்வொரு இடத்திலும் காண முடிந்தது. பேரவைத் தலைவர் தில்லை க. குமரன் மற்றும் செயற்குழுவினர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் பாராட்டப் பட வேண்டியவர்கள்.
வாழ்க தமிழ்! ஓங்குக அதன் புகழ்! வெல்க தமிழர்!!
PHOTO ALBUM
வாழ்த்து மடல் - Dr. A.P.J. அப்துல் கலாம்
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 21 வது தமிழ் விழா கொண்டாடும் இச்சமயத்தில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழனாக
கூடி இந்தியனாக பரிணமித்து அறிவார்ந்த விழிப்புணர்ச்சி பெற்ற உலக
குடிமகனாக நீங்கள் மாறி இருக்கிறீர்கள். ஏனென்றால் இந்தியாவுடனான உங்களது
தொப்புள் கொடி உறவு மிகப் பெரிய ஆன்ம பலம் பொருந்தியது. 54 கோடி இந்திய
இளைஞர்களுக்கு நல் வழிப்பாதையை காட்டி, அவர்களது கற்பனை திறனை வளர்த்து, என்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்க்கும் பணியில்
உங்களது அறிவை தாருங்கள். உங்களது அனுபவத்தை தாருங்கள். வாருங்கள்
உங்கள் வருங்கால சந்ததி வளர்ந்த இந்தியாவில் அடி எடுத்து வைக்க வளமான
இந்தியாவை 2020 க்குள் உருவாக்குவோம்.
Dr. A.P.J. அப்துல் கலாம் முன்னாள் குடியரசுத் தலைவர்